Sunday, June 20, 2010

...‘பெண்’ என்று உணர்ந்தேன்...

உலக்கை போட்டு
ஒதுக்கிய நாளில்தான் – நான்
‘பெண்’ என்று உணர்ந்தேன்

தம்பியைத் தொடுவதும்
தப்பென்றானது.

அப்பா முகம் கூட
அடுக்களைக்
கதவிடுக்கில்தான் தெரிந்தது.

நிமிர்ந்து நடப்பதும்
நேர் கொண்டு பார்ப்பதும்
உரக்கச் சிரிப்பதும்
உருண்டு படுப்பதும்
இனி கூடாதென்றாள்
போன தலைமுறைக் கிழவி!

பள்ளிச் சீருடை
குதிகால் மறைத்தது.
பாவாடை தாவணிக்குள் -என்
பால்யம் மறைந்தது.

அம்மா மடிக்கு நெருப்பானேன்
அப்பா மனசுக்கு சுமையானேன்.

ஆக்கர் விட்டு - நான்
பம்பரம் ஆடிய வாசல்,
நொண்டி அடித்து – நான்
பாண்டி ஆடிய வாசல்,
முட்டிக்கால் மண்ணில் பதித்து –நான்
கோலிக்குண்டடித்த வாசல்
இப்போது..,
கோலம் பழகும் இடமானது.

வீட்டுப்பாட நோட்டில்
சமையல் குறிப்பும் – வீட்டுக் குறிப்பும்
இடம் பிடித்தது.

விவரம் அறிந்தேன்
வெகுளித்தனம் மறந்தேன் – என்
பெயர் சொல்லி அழைத்தாலும்
வெட்கப்பட்டேன்.

உலக்கை போட்டு
ஒதுக்கிய நாளில்தான் – நான்
‘பெண்’ என்று உணர்ந்தேன்

Saturday, May 29, 2010

உறவுகள்

ஆராரோ பாடி
அள்ளி எடுத்து அணைத்துக் கொஞ்சி
மூக்கைப் பிடித்து சங்கு புகட்டி
முழங்காலில் கிடத்தி
எண்ணெய்க் குளியல் நடத்தி
சாம்பிராணிப் புகையிட்டு
கருமையில் பொட்டிட்டு
தூளியில் ஆடவிட்டு
தூங்கவைக்க அம்மச்சி வேணும்

தத்தித் தாவும்போதும்
தரையில் உருளும் போதும்
சுவர் பிடித்து நடந்து பழகி
சுளுக்கு விழுந்து புரளும்போதும்
பந்து உருட்டி ஆடும் போதும்
பாட்டுப்பாடி குதிக்கும் போதும்
மழலையில் உளறும் போதும்
மண்ணை அள்ளித் திண்ணும் போதும்
கைதட்டி ரசிக்கவும்
யானை அம்பாரி தூக்கவும்
தாத்தா வேணும்

ஊருலா தூக்கிச் சென்று
குச்சிஐஸ் வாங்கித் தந்து
குட்டிக்கர்ணம் சொல்லித் தந்து
குள்ளமாய் நடந்து காட்டி
குமிழ்குமிழாய் சிரிப்பு காட்டி
குட்டித் தொப்புளில் ,
வாய் வைத்து சத்தமெழுப்பி
என் விரலில் சிக்கிய முடியை
சிணுங்கிச் சிணுங்கி மீட்டெடுத்து
தூங்கும் போது எனை ரசித்து
மற்ற நேரம் அழ வைத்து
உலகையே விலை பேசி
எனக்காக அதை வாங்க
தாய்மாமன் வேணும்

பாலுக்கு அழும்போதெல்லாம்
அம்மாவை எழுப்பி
வெற்றிலை வாயோடு
முத்தவரும் பாட்டியை
முறைத்து ஒதுக்கி
வட்டிலில் சோறெடுத்து
வட்ட நிலா சுட்டிக்காட்டி
மசித்து மசித்து வாயில் திணித்து
உடை உடுத்தி அலங்கரித்து
அக்கறையாய் கவனித்து
பெறாமல் பெற்ற பிள்ளையாய்
சீராட்டி வளர்க்க
சித்தி வேணும்

என் அப்பாவைக் காதலித்ததால்

அத்தனை உறவுகளையும்
இழந்தது

நீ மட்டுமல்ல...

நானும்தான் அம்மா!

Sunday, March 21, 2010

அடுப்படி அவஸ்தை

வெங்காயம் அரியும்போது
கண்கள் எரிந்தும்
கண்ணீர் வரவில்லை.

கறிகாய் நறுக்கும்போது
கையையும் நறுக்கி
இரத்தம் வடிந்தும்
கண்ணீர் வரவில்லை.

தேங்காய் உடைக்கும்போது
கீரல்களுக்கிடையே மாட்டிய விரல்
வீங்கியபோதும்
கண்ணீர் வரவில்லை.


ஈரக் கையால்
மிக்சியைத் தொட்டு
மசாலா அரைக்கும்போது
ஷாக் அடித்தும்
கண்ணீர் வரவில்லை.

கொதிக்கும் குழம்பை
ருசிபார்த்த போது
நாக்கு வெந்தும்
கண்ணீர் வரவில்லை.

இத்தனை
அடுப்படி அவஸ்தைகளையும்
ஓரங்கட்டி,
பார்த்துப் பார்த்துச்
சமைத்த உணவை
ருசிக்காமல் –
விமர்சிக்காமல்

டிவி பார்த்துக் கொண்டே
விழுங்கினீர்களே!

அப்போது
வடிந்தது கண்ணீர்,

மனதிலிருந்து!

Wednesday, March 17, 2010

ஒரே ஒரு முறை

ஆயிரம் முறை
கனவில் வரும் கருவே!
ஒரே ஒரு முறை
என் வயிற்றில் வாயேன்!

ஒவ்வொரு மாதம்
தூரம் வரும்போதும்
ஒடிந்து போகிறேன்.

ஓரிரு நாட்கள்
தள்ளிப்போனாலும் - நான்
உண்டானதாகவே மகிழ்கிறேன்

அம்மாவாக ஆசைப்பட்டே
அலுத்துப் போகிறேன்.

அவரை அப்பாவாக்கும்
முயற்சியில்
அடிக்கடி தோற்றுப்போகிறேன்

ஆயிரம் முறை
கனவில் வரும் கருவே
ஒரே ஒரு முறை
என் வயிற்றில் வாயேன்

உனக்காக..,

மாங்காய் கடிக்க
ஆசையாய் இருக்கிறது

வாந்தி எடுத்து
மயங்கி விழ
மனது துடிக்கிறது

பிடித்ததை எல்லாம்
பார்த்துப் பார்த்து
ருசியாய்த்தின்ன
நாக்கு தவம் கிடக்கிறது

வீங்கிய வயிறைத்
தூக்கி நடக்க
விருப்பமாய் இருக்கிறது

மாதம் ஒரு முறை
மருத்துவமனை சென்று
மலை போல்
மருந்து மாத்திரை தின்று

கண்ணாடி வளையல் அடுக்கிய
ஒரு கையை
வயிற்றில் ஏந்தி
மறு கையால் இடுப்பைத் தாங்கி
அதிராமல் அசைந்து பார்க்க
பாதம் ஏங்குகிறது

முக்கி முனகி
கத்திக் கதறி
கண்ணிர் விட்டழுது
‘ஆ’ வென்று அலறி...
பிரசவ வேதனையில்
சுகப்பட
அடிக்கடி அழுகிறது
ஆழ்மனது


உனக்காக
இவ்வளவு ஏங்கும்
எனக்காக.

ஒரே ஒரு முறை

Saturday, March 6, 2010

அந்த இருட்டின்
ஆழம் பார்க்க எத்தனித்தேன்

கவ்வியிருந்த கருமை
கண்ணை மறைத்தது

நிதானித்த சில நொடிகளில்
நிலவு நுழைந்தது
ஜன்னல் வழி

இறுக்கிய இமை
இயல்புக்கு வந்தபோது
மங்கலாய் விரிந்தது வெளிச்சம்

மெள்ளத் தடவிய காற்றில்
மேனி சிலிர்த்தபோது

இதமாய் இருந்தது இருட்டு

ஆழம் தேடுவதில்
அர்த்தமில்லை
அனுபவிக்கும்போது...!

வார்த்தைஇல்லா கவிதை

எதைஎதையோ எழுதிவிட்டு
கவிதை என்றேன்

கைதட்டியது அரங்கம்
மெடல் விழுந்தது கழுத்தில்

ஆஸ்தான கவிஞர்
அந்தஸ்து கிடைத்ததாக
அடிக்கடி வந்தது கனவு

“கவிதை எழுதுகிறாளே!
காதலில் விழுந்திருப்பாளோ?”
- சந்தேகம் வந்தது வீட்டில்

இருபதைத் தாண்டுமுன்னே
கட்டிப் போட்டது
தாலிச் சங்கிலி

நான்கு சுவர்களுக்குள்
ஓடிப் போனது
ஒரு வருடம்

இன்று...

இடுப்பு வலியில்
உயிர் துடித்து
பல்லைக் கடித்து
படுக்கையைக் கிழித்து
கத்தி ஓய்ந்தபோது

மீண்டும் கவிதை வாசனை

குவா.. குவா...

வாழ்க்கை

என்னை மறந்த நிலையில்
எச்சில் வடித்துத் தூங்கிய
ஓர் இரவில்
எனக்குள் இருந்த
‘நீ’யும் நானும்
பேசிக் கொண்டோம்

‘நலமா?’ என்றாய்

‘இருக்கிறேன்’ என்றேன்

‘இருப்பது எதற்கு?’ என்றாய்

‘இனியொரு நாள் காண’ என்றேன்

‘காண்பது எதற்கு?’ என்றாய்

‘இன்று போல் வாழ , நாளையையும்’ என்றேன்

‘இன்றென்ன வாழ்ந்தாய்?’ என்றாய்

“முழுதாய் விடியும் முன் எழுந்தேன்,
மூச்சுவாங்க தண்ணீர் இறைத்தேன்,
முற்றம் தெளித்துக் கோலமிட்டேன்,
வீடு துடைத்தேன்
துணிதுவைத்து உலர்த்தி
உலர்ந்ததை மடித்தேன்
மூன்று வேளை சமைத்தேன்
பாத்திரம் துலக்கி அடுப்படி மெழுகினேன்
பரிமாறி பசியாறினேன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல மறந்த வேலைகளும் செய்தேன்” என்றேன்

‘வாழ்ந்ததைக் கேட்டேன் –
செய்த வேலைகளைச் சொல்கிறாய்
இது தான் உன் வாழ்க்கையா?’ என்றாய்

‘சுருக்’கென்றிருந்தது எனக்கு
‘நீ யார்?’ என்றேன்

‘இதுவரை நீ வாழாத வாழ்க்கை’ என்றாய்
மறைந்தாய்

விடிந்தது – எழுந்தேன்
தண்ணீர்க் குடம் தூக்கி
கிணற்றடி நடந்தேன்

”வாழ்வது எப்படி?”
என்று சிந்தித்துக் கொண்டே…!